‘‘தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களை பொறுத்தவரையில், தமிழக வெற்றி கழககூட்டணி 100-க்கு 200 சதவீதம் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. அது ஒரு மாபெரும் வெற்றியாக அமையும். கள நிலவரத்தின்படி, குறைந்தது இந்த இரண்டு தொகுதிகளிலும் மற்ற எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் கூடுதலாக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது கூறினார்.
கோபிசெட்டிபாளையம் அருகே பொலவக்காளிபாளையம் – எல்லமடை வழித்தடத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் கொண்டுவரப்பட்டது. இதனை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். எல்லமடை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான அப்பகுதி பொதுமக்கள், பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்திக் கடந்த வெள்ளிக்கிழமை ஈரோடு – சத்தியமங்கலம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் இந்த வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அப்பகுதி பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் கலை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களை பொறுத்தவரையில், தமிழக வெற்றி கழக கூட்டணி 100-க்கு 200 சதவீதம் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. அது ஒரு மாபெரும் வெற்றியாக அமையும். கள நிலவரத்தின்படி, குறைந்தது இந்த இரண்டு தொகுதிகளிலும் மற்ற எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் கூடுதலாக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு நேரடியான, சிறந்த ஆட்சியைத் தந்து வருகின்ற இந்த அரசு, மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.நிதி நெருக்கடி மற்றும் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருந்தாலும் கூட, ஒரு நாளைக்கு 342 கோடி ரூபாய் வட்டி கட்டினாலும் கூட, இந்த அரசு எவ்வித தொய்வும் இன்றி மக்கள் பணிகளைச் சிறப்போடும் சீரோடும் செய்து வருகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது மற்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஒரு நாகரிகமான அரசியல் என்பது அனைவருக்கும் தேவை. சட்டப்படி வழக்குத் தொடுப்பது என்பது வேறு; ஆனால் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் பேசுவது முற்றிலும் தவறானது.
இதுபோன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் பேசுகிறார், இவரும் பேசுகிறார். அவர்களுடைய தகுதி அவ்வளவுதான். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதை பொறுத்தவரையில், அவர் இதுவரை 12 முறை தோல்வியைத் தழுவியவர், கடுமையான விரக்தியில் உள்ளார்’’ என்று பேசினார் செங்கோட்டையன்!
