தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் திடீரென தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது… சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என தி.மு.க. நிர்வாகிகள் கொந்தளித்துப் பேசினார்கள்.
தமிழகத்தில் தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் ஏற்பட்ட உரசல் டெல்லி வரை சென்றது. ராகுல்காந்தியும் ஸ்டாலினை கண்டுகொள்ளவில்லையாம். இந்த நிலையில்தான் பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்குமா ஏன்ற கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘அமைச்சரவையில் பங்கேற்பு’ நிகழ வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது.
மோடி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையே சமீப நாட்களாக இந்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மோடி அமைச்சரவையில் உள்ள ஹர்தீப் சிங் பூரி மற்றும் பி.எல். வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹர்தீப் சிங் பூரி மற்றும் பி.எல். வர்மா இருவரும் 2020 நவம்பரில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் 6 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே இருவரையும் மீண்டும் ராஜ்யசபா வேட்பாளர்களாக பாஜக அறிவிக்காதது கவனம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் ஒருவர் மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்க வேண்டும். பூரி மற்றும் வர்மா இருவரின் ராஜ்யசபா பதவிக்காலமும் நவம்பரில் நிறைவடைய உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் இருந்து அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் அடுத்த 6 மாதங்களில் வேறு மாநிலத்தில் இருந்து ரஜய்சபாவுக்கு தேர்வாகவில்லை என்றால் அமைச்சர் பதவியை இழப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது.
ஹர்தீப் சிங் பூரி முதன்முதலில் 2018 ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது மனோகர் பாரிக்கர் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் தேர்வானார். பின்னர் 2020 நவம்பரில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 2024 ஜூன் மாதம் மூன்றாவது முறையாக மோடி அரசு பதவியேற்றபோது, ஹர்தீப் சிங் பூரிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பி.எல். வர்மா 2020 நவம்பரில் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானார். பின்னர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2024 ஜூனில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளில் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த இருவரும் தான் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்பே குறிப்பிட்டது போல மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது மத்திய அமைச்சரவையில் 12 இடங்கள் காலியாக உள்ளன. அதாவது அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் இடம்பெறலாம். ஆனால் தற்போது 69 பேர் மட்டுமே அமைச்சரவையில் உள்ளனர். உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என்கிறார்கள்.
மேலும், கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் என்டிஏ கூட்டணியில் திமுக இணையலாம் என்ற பேச்சும் தொடர்ந்து எழுந்து வருகிறது. மத்திய அமைச்சரவையிலும் திமுகவுக்கு வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் இங்குள்ள அரசியல் கட்சிகள் ‘பா.ஜ.க.வுடன் மறைமுக உறவில்’ இன்னும் சொல்லப்போனால் ‘கள்ள உறவின்’ மூலம் காரியம் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். தி.மு.க., த.வெ.க., அ.தி.மு.க. என அனைவரும் மறைமுக உறவில் இருந்தாலும், அ.தி.மு.க.வைத் தவிர உறவில் இருப்பதை வெளியில் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார்கள்.
காரணம் தமிழகத்தைப் பொறுத்தளவில் பி.ஜே.பி. என்றாலே ஏதோ தமிழகத்திற்கு எதிரிக்கட்சி என்ற மாயத்தோற்றத்தை, மனநிலையை உருவாக்கி மக்களிடம் வாக்குகளை வாங்கிப் பழகிவிட்டார்கள். அப்படியிருக்கும் போது தி.மு.க. மோடி அமைச்சரவையில் பங்கேற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
