உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 11-ம் தேதி தொடங்கி 21ம் தேதிவரை 10 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக அரசின் சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இவ்விழாவில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று மைசூருவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 10 நாட்களும் நடத்த வேண்டிய பல்வேறு கலை நிகழ்வுகள் குறித்தும், சிறப்பு விருந்தினர்களை அழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

டி.கே.சிவகுமார் முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் தசரா விழா என்பதால் இதனை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசின் சார்பில் விமான கண்காட்சியை தொடங்கி வைக்குமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தசராவில் சிறப்பு விருந்தினராக‌ பங்கேற்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் விரைவில் தமிழக முதல்வர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார் என மைசூரு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா தசரா விழாவிற்கு அழைப்பு விடுத்து என்ன பயன் என்கிறார்கள் தமிழக மக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal