தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்ததாக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.

நேற்று தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க .ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா, பல்டி பாமா’ என விமர்சித்த அவர், சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார். இதனையடுத்து சத்யபாமாவை மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாக தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் கோவை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி உள்ளார். இந்த வயதிலும் இவ்வளவு மோசமாக ஒரு பட்டியலினப் பெண்ணைப் பற்றி பேசியுள்ளார். அதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

திமுகவினர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். எனவே தான் அவர்களை ‘தீய சக்தி திமுக’ என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதாகவும், சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்,” என்றார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும்.

திமுகவினர் இந்தத் தேர்தலில் ஸ்டாலினைக் காண்பித்து ஓட்டு கேட்பார்களா? உதயநிதி ஸ்டாலினைக் காட்டி ஓட்டு கேட்பார்களா? அல்லது அவர்கள் செய்த நல்ல விஷயங்களைக் காண்பித்து ஓட்டு கேட்பார்களா? இதில் எதையுமே காண்பித்து ஓட்டு கேட்க முடியாமல், வக்கிரத்தை காட்டி ஓட்டு கேட்டு வருகிறார்கள். கேவலமாக மைக்கைப் பிடித்து ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசி வருகின்றனர். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தோல்வியை மட்டுமே தழுவும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal