தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் நாளையுடன் பரப்புரை நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவடைகிறது. தவெக அரசு தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் நிலையில் இந்த இடைத்தேர்தல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த நிலையில், நாளையுடன் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.

நாளை மாலை 6 மணியுடன் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், இன்று மதுராந்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுகிறார். தாராபுரத்தில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இறுதிக்கட்ட பரப்புரை என்பதால் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி நாம் தமிழர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் களத்தில் போட்டியிடுகின்றனர். 5 முனைப் போட்டியாக உள்ள இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது பலத்தை மேலும் பெருக்கும் முனைப்பில் தவெக மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

நாளை மாலையுடன் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், இதன்பின்பு தேர்தல் ஆணையம் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும். வாக்குச்சாவடி அமைய உள்ள பள்ளிகள், தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெறும். மேலும், காவல்துறையினரின் எண்ணிக்கை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.

நேரடியாக தேர்தல் பரப்புரை மட்டுமின்றி இணையதளம் மூலமாகவும் இரு தொகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகள் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்கள் நேர்மையாக தங்கள் வாக்குகளைச் செலுத்தவும் அறிவுரை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்தி அவர்களது ஆட்சிக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal