தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி டெல்லி மற்றும் மும்பையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எஸ்ஐஆர் உட்பட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கு அவர் செவி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​ (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இன்று (அக்.2) போராட்டத்தை அறிவித்தன. மும்பையில் சிஜேபி போராட்டம் நடத்தும் என்று அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார்.

இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக ஜந்தர் மந்தர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. மேலும், ஜந்தர் மந்தர் சுற்று வட்டார பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது. போராட்டத்துக்கு தடையும் விதித்திருந்தது டெல்லி போலீஸ்.

டெல்லியில் போலீஸாரின் தடையையும் மீறி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal