தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தவெக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் சில வார்த்தைகளை விட்டார். அவர் அதிமுகவில் இருந்து தவெக கட்சிக்கு வந்ததை குறிப்பிட்டு அவர் பெட்டி பாமா, பல்டி பாமா என அழைக்கப்படுவதாக சொன்னார். அதோடு மட்டுமல்லாமல் இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படித்தான் பல்டி அடித்தாரோ என தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிகப்பெரிய ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் இப்படி உருவக்கேலி செய்யலாமா என கடும் கண்டனம் எழுந்தது.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக அமைச்சர்கள், பிற கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தலைவர் ஸ்டாலின் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்… அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்“ என கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட கண்டன பதிவில், “தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ. நிலை மாறினால் குணம் மாறுவான் . பொய் நீதியும் நேர்மையும் பேசுவான். தினம் ஜாதியும் பேதமும் கூறுவான். பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டதிமுக தலைவரே.. மன்னிப்பு கேள்“ என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில்,“சத்தியபாமாவை ஸ்டாலின் கேலிச்சித்திரம் வரைந்த செயல் தவறானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தேர்தல் பிரச்சாரமா? அல்லது பெண்களைக் கேலி செய்வதன் மூலமான பிரச்சாரமா? உங்கள் அரசியலில் இப்படித்தான் பெண்களைக் கேலிச்சித்திரம் வரைவீர்களா? மக்களின் வாக்குகளை நாடும் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?“ என கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில் இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது“ என தெரிவித்துள்ளார்
அமைச்சர் விஜய்பாலாஜி, “ காந்தியடிகளின் பிறந்த தினத்தில் அவரது உயரிய கொள்கைகளில் முதன்மையானதான பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை மற்றும் பெண்களுக்கான சம மரியாதை ஆகியவற்றை முற்றிலும் இழிவுபடுத்தும் விதமாக திமுக தலைவரின் இன்றைய பிரச்சாரப் பேச்சு அமைந்துள்ளது. பெண்களை உருவக்கேலி செய்வதை திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வாடிக்கையாக கொண்டுள்ளது ஒட்டுமொத்த தமிழக பெண்களின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்“ என விமர்சித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பதிவில், “அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா? ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது“ என தெரிவித்துள்ளார்.
