வழிகாட்டி பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில் இரண்டு பொறியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டள்ள தமிழக அரசு, இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
