தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் பட்டியலிட ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராகேஷ் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மற்றும் வழக்கறிஞர் முதித் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் ஆஜராகி, மனுவை விரைவாக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனுவை அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.
ராகேஷ் குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தனது முடிவுகளை ஒருமனதாக எடுக்கவில்லை என்றால், அது தீவிரமான ஒரு பிரச்சினை. எனவே, இது சரிபார்க்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எடுக்கப்பட்ட முடிவுகளின் முழுமையான பதிவுகளை நீதிமன்றம் கோர வேண்டும். குற்றச்சாட்டுக்கள் உண்மையெனக் கண்டறியப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையராக செயல்படக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
அரசியலமைப்பின் 324 (1)-வது பிரிவு தேர்தல் நடத்தும் பொறுப்பை தேர்தல் ஆணையத்திடமே ஒப்படைக்கிறது. தனிநபர் ஒருவரிடம் அல்ல. முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் வார்த்தையே இறுதியானது என்று கருதினால், அது மற்ற தேர்தல் ஆணையர்களைச் செயலற்றவர்களாகவோ அல்லது பெயரளவில் மட்டும் இருப்பவர்களாகவோ மாற்றிவிடும்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதால் மட்டுமே அவர் மற்ற தேர்தல் ஆணையர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர் ஆகிவிடாது என்று 1995-ம் ஆண்டின் டி.என். சேஷன் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
இனிவரும் காலங்களில், தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய ஒரு குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்ஐஆர் பணி தொடர்பாக முன்னணி ஆங்கில நாளிதழ் அண்மையில் புலனாய்வு செய்தியை வெளியிட்டது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டப்பட்டது.
படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், இசிஐநெட் மென்பொருளைக் கையாள்வதில் மாநில தேர்தல் அலுவலர்களின் அதிகாரம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் செய்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
