தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க நாளை மறுநாள் மதுரை செல்லும் முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நாளை மறுநாள் மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதற்கான பயணத்திட்டத்தின்படி, நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் முதலமைச்சர் விஜய் மதுரை விமான நிலையம் சென்றடைகிறார்.
அதன்பிறகு, நண்பகல் 12.30 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, 10 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கிறார். பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் ஓய்வெடுக்கிறார்.
மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, மாலை 5.30 மணி அளவில் முதலமைச்சர் விஜய் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.
