‘‘நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை. தலைமுடியை வெட்டிக் கொண்டாலும் பிரச்சினை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது’’ என வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார் சென்னை மேயர் பிரியா!

நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் மேயர் பிரியா. இந்த நிலையில் நேற்று அவரது தலைமுடி அலங்காரத்தை வைத்து பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் ‘‘ஏன் எப்போதும் என்னையே குறி வைக்கிறீர்கள்? நான் பெண் என்பதாலா? அல்லது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலா?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் மேயர் பிரியா.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னையே ஏன் குறி வைக்கிறார்கள். நான் என்ன செய்தாலும் அது ஏன் சர்ச்சையாகிவிடுகிறது? முதல் நாளில் இருந்து இன்று வரை, நான் செய்யும் மிகவும் சாதாரணமான விஷயங்கள்கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை. தலைமுடியை வெட்டிக் கொண்டாலும் பிரச்சினை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது.
சில நேரங்களில் நான் யோசிப்பதுண்டு… நான் ஒரு பெண்ணாக இருப்பதாலா இது நடக்கிறது? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலா? என்னைப் பொறுத்தவரை, பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பதாகக் கூறுபவர்களும், பெண்களுக்காக நிற்பதாகச் சொல்லிக்கொள்பவர்களும் எங்கே சென்றுவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.
அரசியலில் இருக்கும் பெண்கள் குணமற்றவர்களோ, மரியாதைக்கு குறைவானவர்களோ அல்ல. பொது வாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண் என்பதற்காக, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அவரை யாரும் தீர்மானிக்கவோ, விமர்சிக்கவோ உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு கண்ணியம் இருக்கிறது. சுயமரியாதை இருக்கிறது. தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழும் உரிமையும் இருக்கிறது. மேயர் என்ற பதவிக்கு அப்பால், அவர் ஒரு பெண் என்பதையும், அந்தப் பெண்ணை மதிக்க வேண்டும் என்பதையும் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்’’என கூறியுள்ளார்.
பெண் பாதுகாப்பைப் பற்றி அடிக்கடி பேசும் த.வெ.க. தலைவருக்கு இந்த மெஸேஜை ஃபார்வேர்டு செய்யுங்கள்..!
