தவெகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் 11 பேருக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற போது, பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகினர். அவர்களில் பலருக்கும் கட்சிகளில் உரிய பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந் நிலையில் தவெகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் 11 பேர் உள்பட பலருக்கும் தவெகவில் துணை பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளை அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ். எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜூ, கே.டி.பச்சைமால், வெல்லமண்டி நடராஜன்,என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், எஸ்.வளர்மதி ஆகியோர் துணை பொதுச்செயலாளர் களாக நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோல், சந்தீப் ஆனந்த், கே.ஜி.முத்து வெங்கடேஸ் வரன், தொள்ளமூர் கண்ணன், வி.சி.ஆர் குமரன் ஆகியோரும் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகின்றனர்.
மேலும், மடத்துக்குளம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக சி.மகேந்திரன் நியமிக்கப்படுகிறார். புதிய நிர்வாகிகளுக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
