தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பாஜக நயினார் நாகேந்திரன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று விஜய் கிண்டல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். செத்த மாட்டின் தோலில் செருப்பு செய்யலாமே. செத்த ஆட்டின் தோலினால் ஆடை நெய்யலாமே.. செத்த மனிதன் தோலில் என்ன செய்ய முடியும் என்கிற கவிதை எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்கிற நிலை தமிழகத்தில் அமைந்துள்ளது. ரத பிரதமரின் சாதனைகளை ஒரு மணிநேரம், ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக பட்டியலிட முடியும். சொல்லிக் கொண்டே போகலாம். அது எல்லாம் மக்களுக்கு ரீச் ஆக வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ரதமரின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுவதில்லை. கடந்த காலங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலை நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு மாற்றாக வருவோம் என்று நினைத்தபோது இவர்கள் வந்துவிட்டனர். இதுவும் மாறும். வருகிற நாட்களில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.
இவர்களால் நாட்டில் என்ன செய்துவிட முடியும். சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே அப்பா எங்கே என தேடுகிறார். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் சென்று அப்பாவை தேடினால் எப்படி கிடைப்பார். இப்படிப்பட்டவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி செய்பவரின் சூழல் மோசமாக உள்ளது” என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த பெண் நிர்வாகிகளை வைத்து கொண்டே மேடையில் வைத்து கொண்டே நயினார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து நயினார் அநாகரீமாக பேசியதாக தவெகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவிர, காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, ‘வி த லீடர்’ அமைப்பு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.” என தெரிவித்துள்ளார்.
