பிரபல சினிமா தயாரிப்பாளர் (சௌந்தர்யன் பிக்சர்ஸ்) விடியல் ராஜ் தொடர்ந்த வழக்கில் மற்றொரு தயாரிப்பாளரான (வால்மார்ட் பிலிம்) சாய் பாபாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையை விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

விடியல் ராஜ்

இந்த வழக்கின் விபரம் வருமாறு-… புகார் தாரரான விடியல் ராஜ் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16,90,000/- தொகையை சாய் பாபாவுக்கு நிதி உதவியாக வழங்கியுள்ளார். அந்த தொகையை திருப்பிச் செலுத்துவதாக சாய் பாபா உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் ரூ.50,000/- மட்டும் திருப்பிச் செலுத்தினார்.

சாய் பாபா

மீதமுள்ள தொகைக்கு, சாய் பாபா 11.10.2025 தேதியிட்ட ( காசோலை எண் 061988 ) காசோலையை ரூ.40,01,600/- தொகைக்கு, யெஸ் வங்கி, நுங்கம்பாக்கம் கிளை கணக்கிலிருந்து விடியல் ராஜுவுக்கு வழங்கினார். அந்த காசோலை, மனுதாரரின் எச்.டி.எஃப்.சி. வங்கி, நெல்சன் மாணிக்கம் சாலை கிளை, சென்னை மூலம் செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது, 14.10.2025 அன்று “கணக்கு மூடப்பட்டுள்ளது” என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 24.10.2025 அன்று மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் குற்றம் சாட்டப்பட்டவரால் 24.10.2025 அன்று திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், அதன் நகல் 28.10.2025 அன்று வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, அவர் மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டம், பிரிவுகள் 138 மற்றும் 142-ன் கீழ் குற்றத்தை புரிந்துள்ளார் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில்தான் கடந்த 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், சாய் பாபாவின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதோடு, ஒரு ஆண்டு சிறை தண்டனையை விதித்து அதிரடியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. தவிர, விடியல் ராஜுக்கு ரூ.40,01,600 ஐ 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகை 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், மேலும் 2 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புதான் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal