“சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியின் இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். சொன்ன வார்த்தையை காப்பாற்றி பழைய பொறுப்புகளை வழங்கி, எல்லோரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரன் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. காலையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற பிறகு, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, “ஒரு மாத காலத்திற்கு முன்னால் எங்களுக்கு பொதுச் செயலாளர் பொறுப்புக்களை அறிவித்தார். அப்போதே தெளிவாக ஒரு கடிதத்தில் பத்து பேர் கையெழுத்திட்டு, எங்களுக்கு புதிய பதவிகள் வேண்டாம், நாங்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.
கட்சிக்காக எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு அதிமுக ஆட்சிக்கு வர உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர உழைத்தவர்கள், ஜா., ஜெ., அணி பிரிந்தபோது எப்படி சேர்ந்தார்களோ, ஓ.பி.எஸ்., பிரிந்தபோது எப்படி நடந்துகொண்டார்களோ அதேபோல் பழைய பதவிகளை தருவதாக சொன்னதால் தான் சேர்ந்தோம். இதுவரை அதை செய்யவில்லை.
பழனிசாமி வாக்குறுதி அளித்தபடி எங்களுக்கு மீண்டும் பழைய பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பொதுக் குழுவை கூட்டி தேர்தல் தோல்வியை பற்றி ஆராய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதேபோல அதிமுகவில் எந்த ஒரு முடிவை எடுக்கவும் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தோம். அவை எவற்றையும் இதுவரை செய்யவில்லை.
அதே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தினமும் நிறைய பேரை கட்சியில் இருந்தும் நீக்கி வருகின்றனர். அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியின் இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். இன்று கட்சி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. திமுக கூட செல்ல அதிமுக முடிவுசெய்ததால் தான் நாங்கள் தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோம்.
சொன்ன வார்த்தையை காப்பாற்றி பழைய பொறுப்புகளை வழங்கி, எல்லோரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வோம். அதுவரை அதிமுகவில் உறுப்பினராக இருந்து எங்கள் வேலையை செய்வோம். எங்கள் எம்எல்ஏ வேலையை சிறப்பாக செய்வொம். எல்லோரையும் அனுசரித்து செல்லாமல் எப்படி கட்சி பலமடையும், எப்படி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் கூறுகையில், “இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை ஒப்படைத்துவிட்டு சென்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவிற்கு வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதை அவர் தான் சிந்திக்கவேண்டும். கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை சொன்னோம். அதை அவர் கேட்கவில்லை. காலம் பதில் சொல்லும்” என்றார்.
