மதுராந்தம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா மாற்றம் இருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்! தற்போதே முதல்வர் கையில் இதற்கான லிஸ்ட் தயாராக இருக்கிறது என்கிறார்கள்!

முதல்-அமைச்சர் விஜய், தனது அமைச்சரவையில் உள்ளவர்களை கடுமையாக எச்சரித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினால் பதவியை விட்டு உடனடியாக தூக்கிவிடுவேன் என்றே கூறியுள்ளார். அதேபோல் அமைச்சர்களாக உள்ளவர்கள் எந்த சர்ச்சையிலும் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அப்படி சிக்கினால் எவர் என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களை எச்சரித்துள்ளார்.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனிநபர் விமர்சனங்கள், போதைப்பொருள் பிரச்சனை போன்றவை முதல்வர் விஜய்யை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளன. அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவமானம் நேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு போன்ற சம்பவங்களை கேட்டு முதல்வர் விஜய் கோபம் அடைந்தாராம். இதில் அதிருப்தியை போக்க வேண்டுமென்று விரும்புகிறாராம். அதற்காக ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறாராம்.

இதற்காக ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடு பற்றிய விவரங்களையும் முதல்வர் விஜய், உளவுத்துறை மூலமாக வாங்கி வைத்துள்ளாராம். உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் யார் யாரை சந்திக்கின்றனர்? என்ன பேசுகின்றனர்? கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்வது யார் என்பது உள்ளிட்ட விவரங்களை முதல்வரின் டேபிளுக்கு கொண்டு போய் உள்ளார்களாம். தற்போது இடைத் தேர்தல் நேரத்தில் அமைச்சரவை மாற்ற வேண்டாம் என்று தள்ளிவைத்துள்ள முதல்வர் விஜய், இடைத்தேர்தல் முடிந்த பின்னர் சிலரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும், சிலருக்கு இலாகாவை மாற்றவும், சிலரை சேர்க்கவும் முடிவு செய்துள்ளாராம். எனவே எம்எல்ஏக்கள் சிலர் இப்போதே அமைச்சர் பதவிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனால் ‘பிஸி’யானவரைச் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்! உயர்ந்தவரும் சிலரை உள்ளே நுழைத்து, அமைச்சரவையிலும் தமக்கான ஆதரவை கூட்டும் வகையில் சில காய்களை நகர்த்தி வருகிறாராம்!

இது பற்றி கோட்டை வட்டாரத்தில் பேசினோர். ‘‘சார், சமீபத்தில்தான் முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். லண்டனில் இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மூவ்களை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தாராம். அதில் இரண்டு அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் முதல்வர். எனவே, இரண்டு தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா மாற்றம் நடக்கும் என்கிறார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெரும் இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவியும், ஒருவருக்கு வாரியத் தலைவர் பதவியையும் கொடுக்கும் முடிவிலும் இருக்கிறார் முதல்வர். இதன் மூலம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கொத்தாக அ.தி.மு.க.விலிருந்து எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு தாவலாம்.’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal