தொழில் அதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் கை மாறியிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கில், அதிகாரிகளுக்கு இடையே கைமாறிய லஞ்சப் பணம் குறித்த தகவல்களை வெளிக் கொண்டுவர புதிய விசாரணைக்குழு அமைத்து சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண முடியாததால் போலீசார் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு நடத்திய மறுவிசாரணையில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான (84 வயது தொழிலதிபர்) வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜெம் வீரமணி தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் புழல் சிறையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலியல் வழக்கில் பல தொழிலதிபர்களுக்கு தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் விஜய், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணியிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என விசாரணை நடத்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய குழு அமைத்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு கைமாறியது? எனவும் விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்களை விசாரித்து வரும் நிலையில் பணப்பரிமாற்றங்களை விசாரிக்க புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜெம் வீரமணி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியவே இந்த புதிய சிறப்பு குழு அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது. தவிர, ஜெம் வீரமணியை காப்பாற்றுவதற்காக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பல கோடி ரூபாய் கை மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில்தான் கடந்த (21ம் தேதி)திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் தொமர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், ‘‘ஜெம் கிரானைட் உரிமையாளர் தொடர்பான வழக்கில் எப்போது குற்றச்சாட்டுகள் வெளிவந்தன? காணொளி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் யார் சொல்லி, விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் சட்டம்&-ஒழுங்கை கவனித்தது. அவருக்கு இதுபற்றி தெரியாதா? அவருக்கு நன்கு தெரிந்த தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விஷயம், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏன் மூடி மறைக்கப்பட்டது? பொள்ளாச்சிக்கு இணையான வழக்கு இது. இந்த அரசு யாருக்காகவும் வளையாது. விசாரணையில் எந்த குறைபாடுகளும் இருக்காது. ஆனால், திமுக ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். யார், யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரமணியை தப்பிக்கவிட்டது?’’ என்றார்.
அடுத்ததாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், ‘‘இந்த வழக்கு மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. கொடூரமான வழக்கு இது. கடந்த (திமுக) ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு மூடிமறைக்கப்பட்டது. அதை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டித்தார்களா, இல்லையா? அவர்களின் நிலைப்பாடு என்ன?’’ என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், ‘‘வீரமணி மீது ஏற்கெனவே 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இதேபோன்று புகார் எழுப்பப்பட்டு அது என்னவானது என்பதே தெரியவில்லை. கடந்த மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். இப்போது அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது எல்லா ஆட்சிக் காலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது. இது மிகப்பெரும் அளவில் நடந்திருக்கும் பாலியல் மோசடி. எனவே, இதில் வீரமணி மட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என நம்புவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ‘‘ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு திமுக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார் அமைச்சர் நிர்மல் குமார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்.

கடந்த 7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்’’என தெரிவித்தார்.
மேலும், ‘‘இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்னை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இத்தகைய கருத்துகளை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில் அதிகாரிகளைத் தாண்டி ஜெம் வீரமணியின் பின்னால் அரசியல் வாதிகளுக்கும் பணம் கை மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. விசாரணையின் முடிவில் சிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
