சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006&-2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பன்னீர்செல்வம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
