மறைமுக பேரம் மூலம் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜனசங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், பிற கட்சிகளில் உள்ள நபர்களை ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மையான ஆட்சி செய்கிறோம் என கூறிக்கொண்டு மறைமுகமாகவும், வேறு அழுத்தங்கள் மூலமும் மற்ற கட்சியின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர். தங்களுக்கு பெரும்பான்மை கிடைப்பதற்காக பெரிய நாடகத்தை தவெக அரசு செய்து வருகிறது.
மக்களின் தீர்ப்பை ஏற்று கூட்டணியுடன் ஆட்சி நடத்தினாலும், குறுக்கு வழியில் பெரும்பான்மை பெறுவதற்காக பணம் மற்றும் அதிகார பேரங்களில் அக்கட்சி ஈடுபடுகிறது. இவர்களின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புக்கும் ஜனநாயகத்துக்கும் உரிய மரியாதை அளிக்கிறதா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.
தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சரின் தந்தை ஆய்வு செய்வதும், கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைப்பதும், மாநகராட்சி கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நபர்கள் தலையிடுவதும் தொடர்கிறது.
அரசு விவகாரங்களில் தகுதியற்ற நபர்கள் தலையிடுவதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. 2 மாத ஆட்சியில் ஆட்சியாளர்களின் முகம் மாறியுள்ளதே தவிர, பெண்கள் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
காவல்துறை சீருடை மாற்றத்தைத் தவிர வேறொரு மாற்றமும் நடக்கவில்லை; குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதுதான் தினசரி செய்திகள் மூலம் தெரிகிறது. மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் அனுமதி இன்றி எதையும் செய்யக்கூடாது என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. எனவே, கூட்டணியில் உள்ள அண்டை மாநில முதல்வருடன் பேசி தமிழகத்தின் நீதியையும் உரிமையையும் நிலைநாட்ட வேண்டியது தமிழக முதல்வரின் பொறுப்பாகும்’’ இவ்வாறு அவர் கூறினார்.
