த.வெ.க. அரசு அமைந்து 50 நாட்கள் கடப்பதற்குள்ளாகவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு, கைது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

த.வெ.க. அரசை கவிழ்க்க செந்தில் பாலாஜி தரப்பு பேரத்தில் ஈடுபட்டதாக அவரைக் கைது செய்யவும் காத்திருக்கிறது. அதே சமயம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைகின்றனர். இதில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, வழக்குகள் நடந்து வருபவர்களும் இணைவதுதான் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

த.வெ.க. ஆட்சியை கலைக்க தி.மு.க. சதி செய்கிறது என முதல்வர் விஜய் தரப்பு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அ.தி.மு.க. எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் பின்னணியில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு ‘செக்’ வைத்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

அதாவது இவர்கள் (த.வெ.க.) செய்வது குதிரை பேரம் இல்லை. ஆனால், தி.மு.க. செய்தது குதிரை பேரமா? என்ற கேள்வியையும் நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர். ஏற்கனவே கைதாகி விடுதலையான முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகவே, ‘என்னிடம் குதிரை பேரம் நடத்தினார்கள்’ என கூறினார். இதனால் டெல்லி மேலிடம் தேர்தல் ஆணையும் மூலமாக த.வெ.க. அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம், ‘‘சார், கடந்த ஜூலை 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இடைத்தேர்தல் அறிவிப்பில் தமிழக தொகுதிகள்பெயரே இல்லாதது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் 6 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தும் கூட அதற்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

தவெகவில் இணைவதற்காகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படாததற்குப் பின்னால், தேர்தல் ஆணையத்தின் ரகசியக் கண்காணிப்பும், குதிரை பேரம் தொடர்பான விசாரணைகளும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர்.

6 எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் தங்களின் பதவிகளைத் துறந்ததன் பின்னணியில் மிகப்பெரிய பேரங்களும், பணப்பரிமாற்றங்கள் இருப்பதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனுக்களை அளித்துள்ளன.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பண பலத்தால் வளைப்பது சதி என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதற்கிடையே, தவெக எம்எல்ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தமக்கு 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகக் காவல் நிலையத்தில் அளித்த புகார், தமிழக அரசியலில் மேலும் ஒரு வெடியைப் பற்றவைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை ஏற்கனவே பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக த.வெ.க.வினர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மற்றும் ஆள் பிடிப்பு அரசியல் புகார்களின் பிடியில் சிக்கியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் ஏன் அவசரமாகத் தேர்தலை நடத்த வேண்டும்? ஒரு மாநிலத்தின் சட்டமன்றக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் அல்லது குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழும்போது, தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தலை தள்ளி வைக்கலாம். அந்த இடங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் வரை தேர்தலைத் தள்ளிவைக்க முழு உரிமை பெற்றுள்ளது. முறைகேடான வழிகளில் உருவான காலியிடங்களுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்துவது ஜனநாயகப் படுகொலைக்குத் துணை போவது போல் ஆகிவிடும் என்பதால், தேர்தல் ஆணையம் மிகவும் எச்சரிக்கையாகக் காய் நகர்த்துகிறது.

மறுபுறம், இந்த எக்ஸ் எம்எல்ஏக்களின் சட்டபூர்வ அந்தஸ்தும் இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளது. அதிமுக கொறடா உத்தரவுகள் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் பரிசீலனையில் இருந்தபோதே, சபாநாயகர் இவர்களின் ராஜினாமாவை மின்னல் வேகத்தில் ஏற்றதை அதிமுக தலைமை நீதிமன்றத்தில் புகாராக அளித்துள்ளது. ஒருவேளை, இந்த எம்எல்ஏக்களின் விலகலுக்குப் பின்னால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் இருந்தது முறையான விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ‘தகுதிநீக்கம்’ செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சட்டச் சிக்கலும் உருவாகலாம்.

எனவேதான் தேர்தல் ஆணையம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது விஜய்யின் மாற்று அரசியலுக்கு மிகப்பெரிய செக்காக அமையும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal