தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டமன்றம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சிகள் மற்றும் தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும், மேகதாது அணை குறித்த தீர்மானம் குறித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்று ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது எனில், அது எங்களது தயவில்தான். எங்களிடம் இருந்து வாக்கு பெற்றவர்கள்தான் தற்போது ஆளும் கட்சியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அப்படியெனில், நாங்கள் எதிர்க்கட்சியில் மட்டுமல்ல, ஆளும் கட்சியிலும் நாங்கள் இடம்பெற்றிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இதை முதலமைச்சர் கவனமாக கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்கள் ஆட்சிக்காலத்தில் 4 புதிய அறநிலையத்துறை கல்லூரியை தொடங்கியிருக்கிறோம். அந்த கல்லூரிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்கிற கேள்வி இருக்கிறது. அதேபோல, பெரம்பூர் தொகுதி முன்னணி தொகுதியாக மாறியிருக்கிறது. வளர்ச்சியில் இல்லை. மின் வெட்டில் முன்னணி தொகுதியாக மாறியிருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், “கடந்த ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறையில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் ஏற்பட்டிருக்கிறது. துறையை மேம்படுத்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை. எத்தனை பேரை வேலைக்கு எடுத்தார்கள்? 70 ஆயிரம் பேருக்கான காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எனவே இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று கூறியிருக்கிறார்.
