புதுக்கோட்டை அதிமுக புதிய மாவட்டச் செயலாராக எடப்பாடியால் அறிவிக்கப் பட்டிருப்பவர் பழனிவேல். அவரது நாகா தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் 17ஆம் தேதி அவரது சொந்த ஊரான கடுக்காக்காடு இல்லத்தில் வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம். வரும் அனைவருக்கும் கறி விருந்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடத்திய பிறந்தநாள் விழாவானது வழக்கம்போல் இல்லாமல் அதற்கும் முதல் நாளான ஜூன் 16 அன்று மாலை முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கட்சியை விட்டு விலகுவதோடு தனது விராலிமலை எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த அறிவிப்பை கட்சிக் காரர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதாக அமைந்தது.

மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கும் நண்பர்களுக்கும் என உடனடி அழைப்பு விடுக்கப் பட்டு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தாலும் தடபுடலாக ஐந்தாயிரம் பேருக்கு கமகமக்கும் கறிவிருந்து பரிமாறப் பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஆட்சி மாற்றமும் வந்தவுடன் அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும் எஸ் பி வேலுமணி தலைமையில் ஓர் அணியுமாக 2 அணியாகப் பிரிந்து எஸ் பி வேலுமணி தலைமையிலான அணியினர் கவர்னரையும் சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய்யையும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதுகுறித்து பல்வேறு பிரச்சனைகள் எழும்பின.
அதனைத் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபட்ட அனைவரும் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அணியில் சேர்ந்ததுடன் தங்களது பணியை தொடர்ந்து வருகிறார்கள். இதில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் எந்த பக்கமும் போகாமல் தனியாக நின்றனர். சிவி சண்முகம் அதே நிலையில் இருக்கும் போது விராலிமலை விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களிடம் கருத்து கேட்பது வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்வதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில்தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதன்படியும் செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு தலைமையில் தொண்டர்கள் வெடி வெடித்தும் மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதேபோல அறந்தாங்கியிலும் நடைபெற்றது.
மறுநாளே பழனிவேல் தனது சொந்த ஊரான ஆலங்குடி அருகே உள்ள வெட்டன்விடுதி கடுக்காக்காடு கிராமத்தில் தனது வீட்டில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து நடத்தினார். அவருக்கு 49ஆவது பிறந்தநாள் என்ற அளவில் ஐம்பதாவது வயது தொடக்கம் என்கிற வகையிலும் இன்று ஐந்தாயிரம் பேருக்கு கறி விருந்து நடத்தியிருக்கிறார். பெயரளவுக்கு அவரது பிறந்த நாள் என்று சொன்னாலும் விஜயபாஸ்கரின் ராஜினாமாவை முன்னிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த கறிவிருந்து என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பிருந்த மாவட்டச் செயலாளர்கள் யாரும் இதுபோல் தங்களது பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை என்பதோடு தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே தெரிவித்திருக்கும் நிலையில் மாவட்டச் செயலாளர் கொண்டாடுகிறார் என்றால் அது அவருக்கான பிறந்தநாள் விழா இல்லை, இதுவரை விஜயபாஸ்கரின் பிடியில் இருந்து இப்போது அதிமுக விடுதலை அடைந்திருக்கிறது. அதற்கான விருந்தைத்தான் மாவட்டச் செயலாளர் நமக்கு வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான வழக்கறிஞர் நெவளிநாதன் கூறுகையில் முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய அண்ணன் விஜயபாஸ்கர் தவெகவிற்குப் போவது என்பது இப்போது எடுத்த முடிவு அல்ல. தேர்தலுக்கு முன்பே எடுத்த முடிவு என்றார்.
வியப்பாக இருக்கிறதே இப்போதுதானே எஸ்பி வேலுமணி தலைமையில் ஓர் அணி திரண்டு ஆளுநரைப் போய்ச் சந்தித்தார்கள் என்று நமது சந்தேகத்தைக் கிளப்பினோம்.அதற்கு அவர் இல்லையில்லை. தேர்தலுக்கு முன்பாகவே கட்சியில் இருந்த பன்னீர் என்பவருக்கு மாநில அளவில் ஒரு பொறுப்பை வழங்கினார். சில நாட்களிலேயே விஜயபாஸ்கர் மீது கோபித்துக் கொண்டு தவெகவிற்குச் செல்வதாகக் கூறி பன்னீர் சென்று விட்டார். அவராகப் போகவில்லை. தவெகவில் உள்ள ஆழம் நீளம் பார்ப்பதற்காக அங்கு அவரை விஜயபாஸ்கர்தான் அனுப்பி வைத்தார்.
அங்கு சென்று சேர்ந்த அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதோடு ஏற்கனவே ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களுக்குத்தான் தவெகவில் சீட் கிடைக்கும் என்பதை பன்னீரிடம் தவெக தரப்பு கறாராகச் சொல்லி விட்டது. விஜயபாஸ்கரின் கணக்கு என்னவென்றால் பன்னீருக்கு மாநிலப் பொறுப்பு கொடுத்து அங்கு அனுப்பி வைத்தால் அவருக்கு விராலிமலையில் சீட் கிடைக்கும். அவரை டம்மி வேட்பாளராக வைத்து தேர்தலில் நிற்கும்போது தான் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்பதைக் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தார். அங்கு பன்னீருக்கு முக்கியத்துவம் கிடையாது என்றதால் கொஞ்ச நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறி விட்டார்.
அதன் பிறகும்கூட தனக்கு டப்பு கொடுக்கும் வேட்பாளர் வேண்டாம் என்பதற்காகத்தான் திமுகவில் சபரீசனிடம் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தி கே.கே.செல்லப்பாண்டியனுக்கு சீட் கிடைக்க வைத்து அவரை மூன்றாமிடத்துக்குத் தள்ளிவிட்டார் என்பதை விட யாரும் எதிர் பாராத வண்ணம் தவெக வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார்.அத்துடன் நின்றாரா என்றால் மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த முகம்மது அப்துல்லாவை தவெகவிற்கு அனுப்பி வைத்து அவரது தம்பிக்குத் தேர்தல் வேலை செய்ய வைத்தார். அவரது தம்பிதான் அறந்தாங்கியில் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கும் முகம்மது பர்வேஸ்.
அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு முதன் முதலில் புதுக்கோட்டை வந்தபோது அவருக்குப் பின்னால் நின்று கொண்டு அவருக்கு அணிவிக்கப் பட்ட சால்வைகளை வாங்கிப் பத்திரப் படுத்தியவர் அன்பானந்தம் என்பவர். அவர் இப்போதுவரை விஜயபாஸ்கரின் நேரடி உதவியாளர்களில் ஒருவர். அங்கு அவரை அனுப்பி வைத்ததும் விஜயபாஸ்கர்தான். அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்த்த அதிமுகவினர் கடுமையான பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததோடு தவெகவில் ஏற்கனவே இருப்பவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததால் அன்பானந்தம் அங்கிருந்து அன்பானந்தம் திரும்பி வந்து விட்டார்.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே அதிமுக எம்எல்ஏக்கள் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு தவெகவில் சேர்ந்து விடுவது என்று முதலில் முடிவெடுத்ததே விஜயபாஸ்கர்தான். அதன் பிறகுதான் வேலுமணி தலைமையில் செயல் பட்டது எல்லாம்.
இவரது நெருங்கிய, இவரால் கட்சியில் வளர்த்தெடுக்கப் பட்டவர்கள் எல்லாம் அண்மைக்காலமாக தவெகவிற்குச் சென்றவர்களை இவர் தடுக்கவில்லை. தடுத்து நிறுத்தியிருந்தால் அதிமுகவில் எண்ணிக்கை குறைந்திருக்காது. ஆனால் போகிறவர்கள் போகட்டும். பின்னாளில் நாமும் அங்குதான் செல்லப் போகிறோம் என்பதால் பேசாமல் இருந்து விட்டார்.
புதுக்கோட்டை தவெகவிற்குத் தெரியாமலே விஜயபாஸ்கர் தன்வயப் படுத்தி வருகிறார். இதை அறிந்தவர்கள் புலம்புகிறார்கள். அறியாதவர்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என்று சபதமேற்றிருக்கும் தவெக தலைவர், முதல்வர் விஜய் குட்கா குற்றவாளியுடன் எப்படிப் பயணிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
விஜயபாஸ்கர் செல்வாக்கான நபர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது அவரது பணம்தான் செல்வாக்கான நபராகக் காண்பிக்கப் பட்டு வந்திருக்கிறது. இன்னொரு விசயமும் இருக்கிறது. இன்றைய விராலிமலைத் தொகுதி மட்டுமல்ல, ஏற்கனவே குளத்தூர் தொகுதியாகவும் இருந்த போது அங்கிருக்கும் மக்கள் இரட்டை இலைச் சின்னம் என்று வாக்களித்து வாக்களித்துப் பழகிப் போன மக்கள் நிறைந்த, அதிமுகவினர் நிறைந்த தொகுதியாகும். அதனாலும் வெற்றி பெற்று வந்திருக்கிறார். விராலிமலையில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவில் சரியான வேட்பாளராக நிறுத்தினால் அதிமுகதான் வெற்றி பெறும்.
இப்போது விஜயபாஸ்கர் மட்டுமல்ல இங்கிருந்து தவெகவிற்குச் சென்றிருக்கும் 99சதவீதம் பேருக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடையாது. ரசிகர் மன்றங்களில் இருந்து தொடர்ந்து பயணிப்பவர்களுத்தான் முன்னுரிமை கிடைக்கும். அப்போது இங்கிருந்து சென்றவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார்.
