நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கிவருவதாகக் கூறினார்.
ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:
டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது.
‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும்.
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் திட்டங்கள் பொதுமக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன் தொடர்ந்து துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். இதற்காக சுமார் ஓரு மாதம் வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
