வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தாங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்றால் விமானங்களை இயக்கவே முடியாத சூழல் கூட ஏற்படலாம் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.

இந்தியாவில் விமான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இப்போது திடீரென இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது ஒரு மிகப் பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

ATF எனப்படும் விமான எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மிகப் பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டு இருப்பதாக ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. நிலைமை மோசமாவதைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ள இந்திய ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு இந்த அவசரக் கடிதம் எழுதியுள்ளது. அதில் எரிபொருள் விலை உயர்வால் லாபம் என்பது இல்லாமல் போய்விட்டதாகவும் விமானங்களை இயக்க வேண்டுமா என்று யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலும், “உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ₹2 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த ஆபரேட்டிங் செலவில் 30% முதல் 40% வரை மட்டுமே எரிபொருளுக்காக இருக்கும். ஆனால், தற்போதைய விலை உயர்வால் இது 55% முதல் 60% ஆக எகிறியுள்ளது. இது நிறுவனங்களின் லாப வரம்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. எரிபொருள் விலை உயர்வால் பல வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் செலவைச் சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இந்த நெருக்கடியிலிருந்து மீள, மத்திய அரசு சில உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FIA வலியுறுத்தியுள்ளது.. கலால் வரி நீக்கம்: விமான எரிபொருள் மீதான 11% மத்திய கலால் வரியைத் தற்காலிகமாக நீக்க வேண்டும். வாட் வரி குறைப்பு: சில மாநிலங்களில் 25% வரை இருக்கும் VAT வரியைக் குறைக்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். விலை நிர்ணய முறை: கச்சா எண்ணெய் விலை சந்தையில் குறைந்தாலும், சில காரணங்களால் விமான எரிபொருள் விலை குறையாமல் இருக்கிறது. இந்த முரண்பாட்டைச் சரி செய்ய வேண்டும். சர்வதேசச் சந்தையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிப் போட முடியாமல் உள்நாட்டு நிறுவனங்கள் பின்வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் நிலவும் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது நேரடியாக இந்தியாவின் விமான எரிபொருள் விலையில் எதிரொலிக்கிறது. ஒருபுறம் உலகளாவிய பதற்றம், மறுபுறம் உள்ளூர் வரிகள் என இருமுனைத் தாக்குதலில் இந்திய விமானத் துறை சிக்கியுள்ளது.

விமான நிறுவனங்கள் தற்போது இந்த விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்களே ஏற்றுக் கொண்டாலும், இன்னும் நீண்ட காலத்திற்கு இதைத் தொடர முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. இதன் நேரடி பாதிப்பு பயணிகளின் பாக்கெட்டில்தான் விழப்போகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal