விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்த நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் முதல் முறையாக விவாகரத்து விவரத்தை வெளிப்படுத்தினார்.

தவெக தலைவர் விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த விஜய்- சங்கீதா தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 24இல் மனைவி தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 பக்க மனுவில், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முந்தைய விசாரணையின் போது, இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பியதுடன், ஏப்ரல் 20-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இருவரும் ஆஜராகாத நிலையில், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், விஜய், சங்கீதா ஆகிய இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் அவர்கள் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்முறையாக பேசியுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜய் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்திற்கு எதிரானவர், பெற்றோருக்கு எதிரானவர் என அவரின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்கின்றனர் சிலர். அது அவர்களுக்கு கைவந்த கலை. அது தான் பெர்சனல் அட்டாக்.

எப்போதோ நடந்து, எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டுவர வைத்துள்ளார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்வதில் அவர்கள் பிஹெச்டி முடித்தவர்கள். முடிந்த ஒரு விஷயம் வெளியே வருகிறது என்றால், இந்த நேரத்தில் வெளிவருகிறது என்றால் அதற்கு எதிர்கட்சிகளை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்.” என்று விஜய்யின் விவாகரத்து குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal