நடிகர் விஜய்யின் தவெகவில் அமமுக இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் பா.ம.க.வில் ராமதாஸ் அணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பும் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் தேர்தலையும் இரு அணிகளும் தனியாகவே சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் ராமதாஸ் அணியை கூட்டணியில் சேர்க்க அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது

இதனால் ராமதாஸ் தரப்பு பாமக ஆதரவாளர்கள், திமுக தலைமையுடன் பேசி வந்தனர். அமைச்சர் எவ வேலு மூலமாக திமுக தலைமையை சந்திக்க முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், பிடிவாதமாக பாஜக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதனால் திமுக தலைமையும் ராமதாஸ் தரப்பை கைவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ராமதாஸ் கடந்த 2 நாட்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு அடுத்ததாக விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனை ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருளும் உறுதி செய்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அருள் பேசுகையில், ‘‘பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பு தான். தமிழ்நாட்டில் ராமதாஸ் கை காட்டுகிறவரே அடுத்த முதல்வர். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும். தவெக தலைவர் விஜய்யை இளைஞர்கள் தேனீக்கள் போல் மொய்த்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. சட்டசபைத் தேர்தலில் 3வது அணி உருவாவதில் எந்த தவறும் இல்லை. தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாமகவுக்காக பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி மூலமாக இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நேற்றைய தினம், ‘த.வெ.க.வுடன் யார் கூட்டணி சேர்கிறார்களோ? அவர்களுக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வருகிறது. உடனடியாக தமிழகத்திற்கு வந்து அவர்களை என்.டி.ஏ. கூட்டணியில் இணைத்துக்கொள்கிறார்கள்’ என்று த.வெ.க.வின் மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
