தமிழகத்தில் பா.ஜ.க. எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் அமித் ஷாவின் ஆபரேசன் எடுபடுமா என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்..!

நாடாளுமன்ற தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் அவர், தென் சென்னை மக்களவைத் தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்கவுள்ளார். இதையடுத்து, வேலூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு, அவர் மீண்டும் டெல்லி செல்லவுள்ளார்.

நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்கவிட திட்டமிட்டிருக்கும் பாஜகவுக்கு, தென் மாநிலங்கள் அதாவது கர்நாடகாவை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மிகவும் சவால் நிறைந்தவையாக உள்ளன. தென் மாநிலங்களில் மட்டும் 129 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், பாஜகவுக்கு 29 மட்டுமே உள்ளது. அதற்காக மிஷன் சவுத் என்ற ப்ளானை பாஜக கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமும், சித்தாந்தமும் நிறைந்த தமிழ்நாட்டில் மாற்று சித்தாந்தம் கொண்ட பாஜக சளைக்காமல் தன்னை மூன்றாவது மாற்றாக முன்னிறுத்த முயற்சிக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, பாஜக தனது கூட்டணி கட்சியான அதிமுக மீது சவாரி செய்து பிடிக்க தயாராகி வருவது கண்கூடாகத் தெரிகிறது.

2024 மக்களவை தேர்தலில் பாஜக ஏற்கனவே தனது கையில் இருக்கும் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்வதுடன், தெற்கில் கூடுதல் தொகுதிகளை பிடிக்கவும் பாஜக திட்டமிட்டு வியூகங்களை வகுத்து வருகிறது. இதுவே மிஷன் சவுத்தின் முக்கிய நோக்கமாகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிராந்திய கட்சிகளால் ஆளப்படும் தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய இரண்டு பெரிய இலக்குகளை பாஜக அடையாளம் கண்டுள்ளது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் தென் மாநிலங்களுக்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டும் வருகின்றன.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பின்னடைவே ஏற்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலாவதாக, தீர்க்கமான கவர்ந்திழுக்கும் திராவிடத் தலைமைக்கு இணையான கவர்ச்சிகரமான மாநிலத் தலைவர்கள் பாஜகவிடம் இல்லை. அத்தகைய தலைமையை பாஜக இன்னமும் உருவாக்கவில்லை.

இரண்டாவதாக, தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு காங்கிரஸ் கூட அதன் செல்வாக்கை இழந்தது. அதன்பிறகு, இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. பாஜகவின் இந்துத்துவா கொள்கை மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மூன்றாவதாக, பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாம் மொழியாக திணிப்பதை தமிழகம் எதிர்க்கிறது. நான்காவதாக, சாதிக் கட்சிகளின் கூட்டணியோ, சமூக நீதிக்கான தேவையோ தமிழ்நாட்டில் இல்லை. இங்கு அவை இரண்டுமே ஏற்கனவே அதிகமாக உள்ளன. எனவே, காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஐ-எம் போன்ற தேசியக் கட்சிகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணி மீதே சவாரி செய்து வருகின்றன.

நான்காவதாக, ஒரு கட்சி வெற்றி பெறவேண்டும் என்றால், அக்கட்சிக்கு கிளைக்கழக நிர்வாகிகள் முதல் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் இருக்க வேண்டும். தமிழக பா.ஜ.க.வில் இன்னும் கிளைக்கழகங்களுக்கு நிர்வாகிகளே இல்லை. இன்று வரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இது பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஒரு கட்சியின் ஆணிவேரே கிளைக்கழக மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள்தான்!

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகளை பாஜக அடையாளம் கண்டு, அந்த தொகுதிகளில் பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக தென் சென்னை மக்களவை நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை, வேலூரில் கூட்டம் ஆகியவை இந்த தொகுதிகள் பற்றி மறைமுகமாக நமக்கு தெரியப்படுத்துகிறது. இந்த இரண்டு தொகுதிகள் தவிர, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், நீலகிரி, விழுப்புரம் ஆகியவையும் பாஜக லிஸ்ட்டில் உள்ள தொகுதிகள். (இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு அதிக செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது)

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாஜக நிர்வாகிகளுக்கு அமிஷ் ஷா பலமுறை வலியுறுத்தியுள்ளார். முதல்வராக ஸ்டாலின் இருக்கும் நிலையில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிக்கலில் சிக்கித் தவித்து வரும் அதிமுக, ஏறக்குறைய தலைமை இல்லாமல் உள்ளது. தி.மு.க.வும் திறம்பட ஆட்சியை நடத்த முடியாமல் சற்று தடுமாறுவதும் தெரிகிறது. அமமுக என்ற தனிக்கட்சியை டிடிவி தினகரன் ஆரம்பித்தாலும், 2021 தேர்தலில் அமமுகவுக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்தன.

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சதவிகிதத்தை கொண்டுள்ளன. பாஜக வெறும் 3 சதவீத வாக்குகளையே கொண்டுள்ளது. எனவே, 2024 தேர்தலில் 9 தொகுதிகள் மற்றும் 20 சதவீத வாக்குகளை இலக்காக கொண்டு பாஜக செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைத் தவிர பாமக, தேமுதிக, விசிக, நாம் தமிழர் கட்சி, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் சிறிய அளவிலான வாக்கு சதவீதம் உள்ளது. சாதிய அரசியலை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சாதி-நடுநிலை பிம்பத்தையே சமூகங்கள் தக்கவைத்துக் கொள்கின்றன. தற்போது, நாடார்கள், கவுண்டர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர்களை தாண்டி தனது செல்வாக்கை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வருகிறது.

2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், பாஜகவைக் கைவிட்டு மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இரண்டு கூட்டணிகளில், திமுக தலைமையிலான கூட்டணி நிலையானதாகத் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, கூட்டணி கணக்குகளே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கைகொடுக்கும் என்கிறார்கள். மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளில் எதுவும், எப்போது வேண்டுமானாலும் சாத்தியம் என்பதால், இப்போது கணிப்பது கடினமானதாகவே இருக்கும்.

இனி வருங்காலங்களில் கிளைக்கழகம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகளை நியமித்து, அடித்தட்டு மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தினால்தான் தமிழகத்தில் ‘அமித் ஷாவின் ஆபரேஷன்’ எடுபடும் என்பதை உணரவேண்டும் இங்குள்ள தலைமை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal