கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது… இந்த கோரமான விபத்தில்290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது..

இதனிடையே, ஒடிசா தலைமை செயலாளர் ஜெனா இதுகுறித்து சொல்லும்போது, “ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் இன்று துவக்கப்பட இருந்த வந்தே பாரத் ரயில் திட்ட அறிமுக நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவங்கி வைக்க இருந்தார். ஆனால் ஒடிசா மாநில ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இதற்காக நடைபெறவிருந்த பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது..

கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும் சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal