சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் தன்னுடன் கல்லூரியில் படித்த மாணவி சுவாதியை காதலித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கோகுல்ராஜை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் ஆணவக்கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மற்ற 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து 5 பேர் விடுதலை எதிர்த்து கோகுல்ராஜின் தாயும் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal