தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ-ஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. இந்த நிலையில்தான் அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்பு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்களும், ஒரு சில மாவட்டத்திற்கு அமைச்சர்களே இல்லாத நிலையும் உள்ளது. இந்த நிலையில்தான் அமைச்சர்கள் இல்லாத மாவட்டத்திற்கு ‘பொறுப்பு அமைச்சர்களை’ நியமனம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு, அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சராக இருந்த சி.வீ.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றபடி, சேலத்திற்கு கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் எ.வ.வேலு, தர்மபுரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தென்காசி கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமநாதபுரம் தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் தாமோ.அன்பரசன், நெல்லைக்கு ராஜகண்ணப்பன், கோவைக்கு செந்தில்பாலாஜி, பெரம்பலூருக்கு சிவசங்கர், தஞ்சாவூருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்களாக செயல்படுவது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal