திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் ஒரு மாஜி அமைச்சர் கூட இந்த சோதனைகளுக்குப் பின்னர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேபி அன்பழகன் அமைச்சராக இருந்தபோது 45.20 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதும் தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சூழலில் அடுத்து எந்த மாஜி அமைச்சர் சிக்கப் போகிறார் என்ற பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்ததாக குறி வைத்திருப்பது முன்னாள் அமைச்சர்களை இல்லையாம். எடப்பாடி பழனிசாமியின் வலது கையாக செயல்பட்டு வரும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் கூட்டுறவு இளங்கோவனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இளங்கோவன் கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2014 முதல் 2020 வரை ரூ.3.78 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இளங்கோவன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal