முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, நேர்மையான அதிகாரிகளை தனக்கருகில் வைத்துக்கொண்டார். அரசு மீது எந்தவித விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, கட்சி நிர்வாகிகள் ‘நில அபகரிப்பில்’ ஈடுபட்டதுதான், அப்போதைய தோல்விக்கு காரணம் என்பதையும் மறக்காமல், ‘ரியல் எஸ்டேட்’ உள்ளிட்டவைகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபடாமல் கடிவாளம் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் அபார வளர்ச்சி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு… ஆளுங் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகம் சிவந்து கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக சித்தரஞ்சன் சாலையில் விசாரித்தபோது, ‘‘சார், ஜி ஸ்கொயர் நிறுவனத்தை ஆரம்பத்திலேயே எச்சரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘நமக்கு ரியல் எஸ்டேட் தேவையில்லை’ என்றும் எச்சரித்தார். தற்போது தி.மு.க.விற்கு தொடர்பு இல்லை என்று சொன்னாலும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் குடும்ப உறுப்பினர்கள் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டு என்பதும் சாதாரணம் இல்லை. அவர்கள் துல்லியமாக கணக்கிட்டு, நெடுநாட்களாக ஆராய்ந்துதான் ரெய்டில் ஈடுபடுவார்கள். அந்த வகையில்தான் ஜி&ஸ்கொயருக்கு தொடர்புள்ள பல இடங்களில் சமீபத்தில் பல நாட்களாக ரெய்டு நடந்தது. இது முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், லண்டனில் இருந்து வந்த மாப்பிள்ளையை அழைத்த முதல்வர், ‘நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்… அவர்களுடன் தொடர்பு வேண்டாம் என்று… இப்போது பார்த்தீர்களா..?’ என்று முகம் சிவந்திருக்கிறார். முதல்வர் இப்படி பேசுவார் என்று குடும்ப உறவுகள் யாரும் எதிர்பார்க்க வில்லை. அதன் பிறகுதான் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் விளம்பர போர்டுகள் எல்லாம் காணாமல் போனது.

அதே சமயம், 30 வருட கால நெருங்கிய நண்பரான ஆவடி நாசரையே அமைச்சரவையில் இருந்து தூக்கியவர் முதல்வர். அண்ணா நகர் மோகன் எம்மாத்திரம். முதல்வர் கண் சிவந்த பிறகு அண்ணா நகர் மோகன், அவரது மகன் கார்த்திக் ஆகியோர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது சசிகலா குடும்பம்… அதுபோல், முதல்வருக்கு நெருக்கம் என அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal