சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த வழக்கு மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:- ‘‘நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். தமிழ்நாடு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறேன்.

அரசியல் வாழ்க்கையில் நேர்மையாகவும், பொது மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். இதனால், எனக்கு பொது மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

தற்போது யூடியூப் சேனலில் எனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். என்னைப் பற்றி மட்டுமல்ல உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் ஒரு யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான பார்களை நான் நடத்தி வருவதாகவும், இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறி பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எனக்கு எதிரான வழக்கில் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்ட பாஸ்கர் மர்மமான முறையில் இறந்ததாகவும் பொய்யான தகவலை கூறியுள்ளார். இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக அவர் சுமத்தி வருகிறார். எனவே சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal