கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பது தொடர்பாக மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் படுதோல்வி தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் மோடி 19 பேரணிகள் மற்றும் 6 ரோட்ஷோக்கள், அமித்ஷா 16 பேரணிகள் மற்றும் 15 ரோட்ஷோக்கள், ஜேபி நட்டா 10 பேரணிகள் மற்றும் 16 ரோட்ஷோக்கள், ஸ்மிருதி இரானி 17 பேரணிகள் மற்றும் 2 ரோட்ஷோக்கள், பிஷ்த் 9 பேரணிகள் மற்றும் 35 பேரணிகளில் கலந்து கொண்டனர். பேரணிகள் மற்றும் ரோட்ஷோ பாஜக மூலம் அடுத்தடுத்து நடத்தப்பட்டது. அங்கே ஹிஜாப் விவகாரம், ஹலால் உணவு விவகாரம், கேரளா ஸ்டோரி, பஜ்ரங் பாலி விவகாரம், சிவில் கோட் சட்டம், லவ் ஜிஹாத் விவகாரம் என கிட்டத்தட்ட பாஜக அனைத்து விதமான பார்முலாக்களையும் பயன்படுத்தியும் கூடமே 30 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உள்ளனர்.

கர்நாடகா போன்ற பாஜக ஆதரவு கொள்கை கொண்ட மாநிலத்திலேயே அந்த கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வெல்லுமா, அவர்களுடன் கூட்டணியில் இருப்பது சரியா என்று அதிமுக தலைமை யோசிக்க தொடங்கி உள்ளனராம். முக்கியமாக அண்ணாமலை தலைமையும் அதிமுகவை திடீரென யோசிக்க வைத்துள்ளதாம்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றிய தொகுதிகளில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கே இருக்கும் கர்நாடக அரசியல் தலைவர்கள்.., அதாவது எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கர்நாடகா சட்டசபை தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அரசியல் ரீதியாக அண்ணாமலை இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்த தேர்தலில்தான் அவர் தனது பலத்தை நிரூபிக்க முடியும்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு பணிகளை செய்தார். வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை முடிவு செய்தது உட்பட பல விஷயங்களில் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுத்தார். தேர்தலில் பணிகளை செய்வதற்காக கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இது எல்லாம் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.

உடுப்பி- சிக்கமகளூரு 8 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள், என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் பாஜக பல பகுதிகளில் மோசமாக அடி வாங்கி உள்ளது. தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 5ல் வென்றுள்ளது. சுயேட்ச் ஒரு இடத்தில் வென்றுள்ளது.

உடுப்பி – சிக்கமகளூரில் – 4ல் பாஜக வென்றதுள்ளது. 4ல் காங்கிரஸ் வென்றுள்ளது.ஷிவமொகா 7 தொகுதிகள்- 1ல் பாஜக வென்றதுள்ளது. 6ல் காங்கிரஸ் வென்றுள்ளது. கோலார் 8 தொகுதிகள்- 5ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 3ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.மாண்டியா 7 தொகுதிகள் – 6ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 1 ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெல்லவில்லை.ஹாசன் 7 தொகுதிகள்- 4ல் பாஜக வென்றதுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 2ல் மஜத தட்சிண கன்னடா 8 தொகுதிகள்- 6ல் பாஜக வென்றுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. பெங்களூரில் 28 தொகுதிகள்- 14ல் பாஜக வென்றுள்ளது. 13ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 1ல் ,மஜத வென்றுள்ளது. உத்தர கன்னடா 6 தொகுதிகள் – 3ல் பாஜக வென்றுள்ளது. 5ல் காங்கிரஸ் வென்றுள்ளது.

அண்ணாமலை வேலை பார்த்த இடங்களில் பாஜக பெங்களூர், தட்சிண கன்னடா, ஹாசன் தவிர மற்ற இடங்களில் கடும் சரிவை பாஜக சந்தித்து உள்ளது. கர்நாடகாவில் அண்ணாமலையின் சரிவு, பாஜகவின் சரிவு இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி இருக்க வேண்டுமா என்று எடப்பாடி பழனிசாமி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், சமீபத்தில்தான் டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். ஆனாலும் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தற்போது யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள். காரணம், தென்னிந்தியாவில் ஆண்ட ஒரு மாநிலத்திலும் ஆட்சியை இழந்திருக்கிறது பா.ஜ.க.!

குறிப்பாக பா.ஜ.க.விற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைப்பதில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தமிழகத்திலும் சிறுபாண்மை வாக்குகள் அப்படியே தி.மு.க.விற்கு சென்றுவிடும். இதைத்தான் தற்போது எடிப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வினர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அதாவது, பா.ஜ.க. தலைமையில் மூன்றவாது அணி அமைத்து போட்டியிடட்டும். நாங்கள் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம் என அமித் ஷாவிடம் எடுத்துக் கூற தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.

அரசியல் களத்தைப் பொறுத்தளவில் நிரந்திர நண்பனும் இல்லை; நிரந்திர எதிரியும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal