வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மற்றும் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 5 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை வகிக்கும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள பா.ஜ.க. தலைவர்கள் கூட்டணியை வலுவாக அமைக்க வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளனர். அதன்படி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க.விடம் தொகுதிகளை கேட்க தீர்மானித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும்.

மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த 20 தொகுதிகளை தாங்கள் பிரித்துக் கொள்வதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.விடம் கேட்கும் 20 தொகுதிகளில் 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

இந்த 13 தொகுதிகளையும் ஏற்கனவே பாரதிய ஜனதா அடையாளம் கண்டு மேலிடத்துக்கு பட்டியலை அனுப்பி இருக்கிறது. அந்த 13 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. 13 தொகுதிகள் போக மீதமுள்ள 7 தொகுதிகளை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு அந்த தொகுதிகளை வழங்க பா.ஜ.க. நினைக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தங்கள் தரப்பு மூலம் இணைத்துக் கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க. வாக்குகள் தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். அணிக்கு 2 இடங்களை கொடுக்க பேசி வருகிறார்கள். அதில் ஒரு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்தை நிறுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்பட கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அனைத்தையும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. என்றாலும் அ.தி.மு.க. தலைவர்களை பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பா.ஜ.க.வின் இந்த முயற்சி வெற்றி பெற்றாலும், வேட்பாளர்கள் வெற்றி பெற மனதார தேர்தல் பணியாற்றுவார்களா? அல்லது உள்ளடி வேலை நடக்குமா? என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க.வினருக்கு எடப்பாடி தரப்பும், எடப்பாடி தரப்பிற்கு ஓ.பி.எஸ். மற்றும் அ.ம.மு.க.வினர் மனதார தேர்தல் வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal