தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்தது அ.தி.மு.க.வில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தி.மு.க. இரண்டு ஆண்டுகளில் 15 துரோகங்கள் செய்ததாக பட்டில் போட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘மாதம் ஒருமுறை மின் கட்டணம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. இது தி.மு.க. அரசின் முதல் துரோகம்.

கொரோனா நோய்த்தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது தி.மு.க. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. அரசு. இது தி.மு.க. அரசின் இரண்டாவது துரோகம்.

சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு. இது மூன்றாவது துரோகம். ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி. இது தி.மு.க. அரசின் நான்காவது துரோகம். ‘நகைக் கடன் தள்ளுபடி’ என்ற வாக்குறுதி தி.மு.க. அரசின் ஐந்தாவது துரோகம்.

கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி அரசின் ஆறாவது துரோகம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது. இது தி.மு.க.வின் ஏழாவது துரோகம்.

அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இது தி.மு.க.வின் எட்டாவது துரோகம். அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு சம்பளம் வழங்காதது 9-வது துரோகம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாதது தி.மு.க.வின் பத்தாவது துரோகம். மகளிர் உரிமைத் தொகை வழங்காதது பதினொன்றாவது துரோகம். நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பன்னிரெண்டாவது துரோகம்.

நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயிக்காதது 13-வது துரோகம். முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி பதினான்காவது துரோகம். எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க. அரசின் பதினைந்தாவது துரோகம்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லி பா.ஜ.க. மேலிடத்தின் கோபப் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக பன்னீர் செல்வம் பட்டியல் போட்டு அறிக்கை வெளியிட்டிருப்பதாக, எடப்பாடி தரப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal