புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ள விளாபட்டி மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி, விஜயராணி தம்பதியினரின் மகன் அரவிந்த். வயது 26. இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேசுவரிக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

நாகேசுவரி இப்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் நாகேசுவரிக்கும் அவரது கணவர் மற்றும் மாமன் மாமியாருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நாகேசுவரி விசமருந்தி தற்கொலை கொண்டு விட்டார். மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டார்.

இது குறித்து பெண் வீட்டாருக்கும் அரவிந்த் வீட்டாருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது. ஆனாலும் நாகேசுவரி இறந்ததால் அரவிந்தின் குடும்பத்தினர் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை மட்டுமல்லாது பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த், அவரது தந்தை தங்கமணி, தாய் விஜயராணி ஆகிய மூன்று பேரும் கைது செய்து சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டனர்.

ஆனாலும் ஆத்திரம் குறையாத நாகேசுவரியின் உறவினர்கள் அவரது சடலத்தை அரவிந்தின் வீட்டு முன் வாசலில் குழி வெட்டி புதைத்து விட்டனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்த பெண்ணின் சடலத்தை சுடுகாட்டிலோ இடுகாட்டிலோதான் இறுதிச் சடங்கு செய்வது வழக்கம். ஆனால் ஆத்திரத்தில் வீட்டின் முன் புதைத்து அந்த வீட்டை யாரும் வசிக்க முடியாத வண்ணம் ஆக்கி விட்டார்கள் என்ற தகவலால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து விட்டார்கள். இது கிராமம் என்பதால் எந்த ஊரிலிந்து வந்து எந்த ஊரில் உள்ள வீட்டை சுடுகாடு ஆக்கியிருக்கிறார்கள் என்ற பிரச்சினையும் பூதாகரமாக உருவெடுத்தது.

இதனால் அரவிந்தின் தாய்மாமன் பால்ராஜ் என்பவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். கர்ப்பிணி நாகேசுவரியின் சடலத்தை வீட்டின் முன் புதைக்கும் செயலில் ஈடுபட்ட மேல சவேரியார்புரத்தைச் சேர்ந்த சண்முகம், அப்பாவு, சைவராசு, வெங்கடேசு, ராஜா, மணி, வீரையா, பாலகிருஷ்ணன், திலகவதி, சின்னத்துரை, கண்ணன், பழனிச்சாமி, லெட்சுமணன், உள்ளிட்ட 50பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal