கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என அண்ணாமலை அடித்துக் கூறிவரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இம்முறை விட்டுவிடுவதாக இல்லை என களமிறங்கி அடிக்கிறது. எப்படியும் தொங்கு சட்டசபை உருவாகும்; ஏதோ ஒரு கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துவிடலாம் என கனவு காணுகிறது ஜேடிஎஸ்.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது அம்மாநிலத்தில் பிரசாரம் சூடு பறக்கிறது. கோடை வெயிலைவிட கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் அதிரடி பிரசாரம் உச்சகட்டமாக இருந்து வருகிறது.
அதேநேரத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை இழக்கும்; காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதாகவே தெரிவித்துள்ளன. ஒருசில கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் என்கின்றன.
தற்போது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதிலும் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களையும் பாஜக 74 முதல் 85 இடங்களையும் பெறும் என்கிறது இக்கணிப்பு. ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 35 இடங்கள் கிடைக்குமாம்.
இதே ஏபிபி சி வோட்டர், பாஜகவில் ஆளும் முதல்வரின் நிர்வாகம், ஆட்சி குறித்து வெளியிட்ட முடிவுகள்: கர்நாடகா அரசின் செயல்பாடுகள் எப்படி? படுமோசம்- 52% சராசரிதான்- 19% நன்றாக உள்ளது- 29% கர்நாடகா முதல்வரின் செயல்பாடுகள் எப்படி? படுமோசம்- 51% நன்றாக உள்ளது.
கார்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை அடித்துக் கூறி வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எபிபிசி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருப்பது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார். கடந்த சில வருடங்களாகவே எபிபி சி வோட்டர் கருத்துக் கணிப்புகள் நிஜமாகி வருகிறது. எனவே, கர்நாடகாவில் உள்ள தற்போதைய சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் என்றே தோன்றுகிறது’’ என்றனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அண்ணாமலையின் அடுத்த ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாஃபிக்காக இருக்கிறது!