‘வைகோவை நம்பி எத்தனை நாள் தொண்டர்கள் ஏமாறுவது… பேசாமல் தி.மு.க.வில் இணைத்துவிடுங்கள்…’ என அவைத் தலைவர் கடிதம் எழுதியிருப்பதுதான் ம.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்று திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் மதிமுகவை மக்கள் எள்ளி நகையாட வழிவகுத்துவிட்டது’’ என வைகோவை கடுமையாக சாடும் வகையிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தங்களின் சமீப கால நடவடிக்கைகளால், கட்சிக்கும், தங்களுக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளனர். அதனால், தமிழ்நாடு முழுவதும் பழைய உறுப்பினர்கள் கூட, தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு, ஆர்வம் குறைந்துள்ளது. கிளை உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும் என்ற விதியை, தாங்கள் 10 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என மாற்றியிருப்பது, கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா? மதிமுகவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை, தங்களின் முடிவிற்கு விட்டு விடுகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக, கொங்கு மண்டலம், மதிமுகவின் கோட்டை என பேசி வருகிறீர்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும், மாநகர மாவட்ட செயலர் தேர்தலை நடத்தி முடித்து விட்டீர்கள் எனச் சொல்லப்படுகிறது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும், போலி பெயர்களில் உறுப்பினர்களை பதிவு செய்து, தேர்தல்களை நடத்தி முடித்துள்ளீர்கள்.

கொங்கு மண்டலத்திலேயே மதிமுகவின் நிலை இதுவென்றால், வேறு மாவட்டங்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான திமுகவில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டது முதலே பல்வேறு மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். துரை வைகோ நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், மதிமுக நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி கட்சியின் அவைத்தலைவரே கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள் எனக் கூறி வைகோவுக்கு கடிதம் எழுதியிருப்பது மதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ம.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும் என அக்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘சார், வாரிசு அரசியலை எதிர்த்து தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்தான் வைகோ…. ம.தி.மு.க.விலும் வாரிசு அரசியலை கொண்டு வந்துவிட்டார். ம.தி.மு.க.வில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அரசியலில் வளர முடியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து தி-.மு.க.விற்கு வந்தவர்கள் கூட ‘வளர்ந்து’ வருகின்றனர். எனவே, வைகோ ஒரு நல்ல முடிவை எடுக்காவிட்டால், நாங்கள் வேறு மாதிரியான முடிவை எடுக்க நேரிடும்’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் நாலு பேர் இருக்கும் ம.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட ஆரம்பித்து விட்டது..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal