அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ஆனாலும் இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக நானே; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என கூறி வருகிறார் ஓபிஎஸ். அண்மையில் ஓபிஎஸ் அணி நடத்திய திருச்சி மாநாடும் கூட பெரிய அளவில் பரபரப்பை கிளப்பாமலே போனது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான அக்கட்சி மூத்த தலைவர்கள் குழு, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது லோக்சபா தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகா தேர்தல் களத்தில் பிசியாக இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடகா மாநிலத்துக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளருமன அண்ணாமலையிடம், அதிமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை என திட்டவட்டமாக அண்ணாமலை கூறினார்.

அதேநேரத்தில் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாரா? என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு, ‘‘பொறுத்திருந்து பாருங்கள்!’’ என ஒரு வரியில் மட்டும் பட்டும் படாமல் அண்ணாமலை பதில் கூறியிருக்கிறார். அப்படியானால் அண்ணாமலை சொல்வதைப் போலத்தான் எதிர்காலத்தில் நடக்குமா? என்கிற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது பற்றி ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க.வில் நாங்கள் இணைந்தாலும், தேர்தல் சமயத்தில் ஓ.பி.எஸ். வேட்பாளர்களுக்கு அவர்கள் மனதார பணியாற்றுவார்களா… அதே சமயம் எங்கள் தரப்பில் அவர்களுக்கு மனதார தேர்தல் வேலை செய்வார்களா..?’’ என்று எடுத்த எடுப்பிலேயே கேள்வி எழுப்பியவர், ‘‘அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்!

அதே சமயம் டெல்லியில்¢ அமித் ஷாவை சந்தித்த எடப்பாடியிடம், ‘‘ஓ.பி.எஸ்.ஸை இணைத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்… இதனால் தமிழகத்தில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகள் நம்மை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. சரி, மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்… எங்களுக்கு 25 சீட்டை கொடுத்துவிடுங்கள்… அதையும் இப்போதே உறுதி செய்யுங்கள்…’’ என்று எடப்பாடியிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அண்ணாமலையின் பேச்சு… ஓ.பி.எஸ். அணி மூத்த நிர்வாகியின் பேச்சு… அமித் ஷாவின் பேச்சு… என எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஓ.பி.எஸ். விரைவில் காவித்து துண்டை தோளில் போட இருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது! இதற்கான தேதியும் குறிச்சாச்சு என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal