‘இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது… இன்னும் ஒரு நாள் இருக்கிறது…’ என திருச்சியில் நடந்த ஓ.பி.எஸ். மாநாட்டில் சசிகலா, டி.டி.வி. கலந்து கொள்வது கூறித்து, ஓ.பி.எஸ். அணியினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முற்றிலுமாக ஓ.பி.எஸ். கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் சசிகலா! புறக்கணிப்பிற்கான காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் சட்ட ரீதியாக உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இந்த நீண்ட மோதலில் ஒருவழியாக வென்றுவிட்டார். கட்சி நிர்வாகிகள் ஆதரவு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு, மாஜி அமைச்சர்கள் ஆதரவு, எம்எல்ஏக்கள் ஆதரவு என்று எல்லாம் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி இதில் எளிதாக வென்றுவிட்டார்.

பொதுக்குழு வழக்கில் அவர் வென்றுவிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம், அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார். முதல் விஷயம் நீதிமன்றம் வழியாக கட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த ஓ பன்னீர்செல்வம் ஏமாற்றம் அடைந்து உள்ளார். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும், என்றும் கூறி உள்ளது. அதன்பின் தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்தது. இனி வரும் நாட்களில் மேலும் நிர்வாகிகள் அணி மாற வாய்ப்புகள் உள்ளன. இது போக தற்போது ஈரோடு கிழக்கில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்திலும் எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இப்படி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வந்த ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருந்தார். அதோடு இவரின் தாயாரும் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் இவர் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

இதற்கிடையில்தான் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் அணி சார்பில் முப்பொரும் விழா திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாடு தோல்வியில் முடிந்து உள்ளது. ஏனென்றால் இந்த மாநாட்டிற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா வரவில்லை. அதேபோல் மாநாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் வரவில்லை.

தென் மண்டலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் யாரும் வரவைல்லை, ஓபிஎஸ் தனிக்கட்சி குறித்து அறிவிக்கவில்லை. முன்னதாக இந்த கூட்டம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவில் என்னை அவமதித்து உள்ளனர். எடப்பாடி ஆட்களை வைத்து என்னை தினமும் அவமதிப்பு செய்து அவமானம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லும் காலம் வரும். அதிமுகவை கயவர்கள் கையில் இருந்து மீட்டு எடுப்போம். அதிமுகவை கைப்பற்ற பார்க்கும் நபர்களை நாம் விரைவில் தூக்கி எறிவோம்.

திருச்சியில் நாம் மாநாடு செய்ய போகும் நாள் மிக முக்கியமான நாள். அரசியலில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை பொதுக்கூட்டத்திற்கு அழைக்கலாம். அவர்களுக்கு முறையாக நேரில் சென்று அழைப்பு விடுப்போம் என்றும் ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறாராம். ஆனால் ஓபிஎஸ் இவர்களை நேரில் சென்று அழைக்கவும் இல்லை. அவர்கள் கூட்டத்திற்கு வரவும் இல்லை.

இதற்கான பின்னணி குறித்து கேட்டபோது, ‘‘அதிமுகவில் ஒருவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க சசிகலா விரும்பவில்லையாம். இரண்டு பேரையும் ஆதரித்து, இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து, அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சசிகலா நினைக்கிறாராம்.

அப்படி இருக்க இப்போது ஓபிஎஸ் மீட்டிங்கிற்கு சென்றால், நாம் ஓபிஎஸ் ஆள் போல தெரிவோம் என்பதால், அந்த மீட்டிங்கிற்கு செல்ல சசிகலா விரும்பவில்லையாம். மேலும், அழைப்பு கொடுப்பதற்கு சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டபோதும், அவரது உதவியாளர் கார்த்திக்கிடம்தான் ஓ.பி.எஸ்.ஸால் பேச முடிந்திருக்கிறது.

காரணம், ஒ.பி.எஸ். ஒரே நிலைப்பாட்டில் இருப்பது கிடையாது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா பல முறை ஓ.பி.எஸ்.ஸிடம் பேச முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ். அப்போது பதவி இருந்ததால் கண்டுகொள்ளாமல் இருந்தார். தற்போது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதால்தான் சசிகலாவை தேடிச் செல்கிறார். சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியவரே ஓ.பி.எஸ்.தான்! இதையெல்லாம் மனதில் வைத்துதான் சசிகலா ஓ.பி.எஸ். மாநாட்டை தவிர்த்தார்’’ என்றார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal