அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓபிஎஸ் அணி மனு கொடுத்தது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தாம் நீடிக்கிறேன்; ஆகையால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுகவின் 2022-ம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியது. இதனடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும். இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் பதவி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை அதிமுகவின் திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இ

தன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் விசாரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. அதனால் அதிமுகவின் மாற்றங்களை சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் தேர்தல் ஆணையமோ, இந்த பிரச்சனையில் நிலைமைகளை கவனித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அத்துடன் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதே பதிலைத்தான் தேர்தல் ஆணையம் கூறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதனால் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என வாதிட்டார். இதனையடுத்து தேர்தல் ஆணையம், இந்த பிரச்சனையில் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் பெங்களூர் புகழேந்தி சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று ஓ.பன்னீர்செல்வம் இதேபோல ஒரு மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தாம் நீடிக்கிறேன்; இந்த பதவி காலாவதியாகவில்லை. ஆகையால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆக, மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு முறையும் ஏதோவொரு வகையில் ஓ.பி.எஸ். ‘செக்’ வைத்துக்கொண்டே இருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal