எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். தரப்பு ‘செக்’ வைத்திருப்பதுதான், எடப்பாடிக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் அதிமுகவின் புதிய சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும் இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தான் தேர்தல் ஆணையத்தில் இயங்குகிறது. இங்கு பொதுச்செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டுள்ளார். அதிமுக ஒன்றரைக் கோடி தொண்டர்கள் பட்டியலே இல்லை.
அதிமுகவின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது ஆகியவைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில், 5 புகார்கள் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. இது பரிசீலனை செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் எனக்கு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு அதாவது ஓ.பி.எஸ் தரப்புக்கு தான் ஒதுக்க வேண்டும். அவரது கையெழுத்து இல்லாமல் எடப்பாடி தரப்பினால் கர்நாடகா தேர்தலில் போட்டியிட முடியாது என புகழேந்தி கூறியுள்ளார்.