கள்ளக்காதலால்தான் குடும்பத்தில் பிரச்னைகள் எழுகிறது என்று தெரிந்தும், பெண்கள் அதில் சிக்கி அழகான குடும்பத்தை சிதைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!

இரண்டு குழந்தைகள் பிறந்தும் இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டு, அவருடன் தனியாக சென்ற பெண்ணை மீட்டு உறவினர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் சத்யா (வயது 28). இவருக்கும், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது. கொளஞ்சி கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியதாக அக்கிராமத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சத்யா வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் வசித்து வந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி சத்யாவிற்கு அறிவுரை கூறியதுடன், அந்த வாலிபரை எச்சரிக்கை செய்து செந்துறை அண்ணாநகரில் வசிக்கும் சத்யாவின் தாய்மாமன் பெரியசாமி மனைவி சாவித்திரியுடன் அனுப்பி வைத்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து சத்யா மற்றும் அவரது தாயார் தனலெட்சுமி ஆகியோர் சாவித்திரி வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தனர். அப்போது சத்யா செந்துறையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த சத்யா, வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்றாராம். அப்போது செல்போனில் கள்ளக்காதலனுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர், தங்களது உறவு காரணமாக பிரிந்து சென்ற தனது மனைவியை உறவினர்கள் பேசி சேர்த்து வைத்து விட்டனர். ஆகையால் நீயும் உனது கணவருடன் சேர்ந்து வாழ் என்று அறிவுரை கூறினாராம்.

இதனால் மனமுடைந்த சத்யா அந்த இளைஞரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் சத்யாவின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு சத்யா தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அவரது உறவினர்கள் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு அருகே உள்ள தேக்கு மரத்தோப்பில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் சத்யா பிணமாக தொங்கியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவின் தற்கொலைக்கு கள்ளக்காதலன் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சத்யா கள்ளக்காதல் விவகாரத்தில் மனமடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கள்ளக்காதலன் கொலை செய்து தூக்கில் அவரை தொங்க விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal