பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்

மோடி இனத்தை அவ மரியாதை செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு தண்டனை விதித்ததால் அவரது எம்.பி. பதவி பறி போனது. இந்த பதவி பறிப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி நாடுமுழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பிரதமர் மோடி நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. சென்னையில் மீனம்பாக்கம், சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரசார் திடீரென கருப்புகொடியுடன் ஊடுருவி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 ஆயிரம் போலீசாருக்கு பதில் 26 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர். பிரதமர் மோடி சென்னையில் விமான நிலையம் தொடங்கி நீண்ட தொலைவுக்கு சாலை மார்க்கமாக நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். பல இடங்களில் மிகப்பெரிய அகலமான சாலைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது போலீசாருக்கு கடும் சவாலாக இருக்கும். அகலமான சாலை பகுதிகளில் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு காங்கிரசார் கருப்பு கொடியுடன் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அத்தகைய சாலை பகுதிகளில் அதிக அளவில் போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை 3-வது நிகழ்ச்சியாக விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் சென்ட்ரலில் இருந்து காரில் மெரினா கடற்கரை வழியாக செல்ல உள்ளார். அந்த சமயத்தில் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே பதுங்கி இருந்துகொண்டு காங்கிரசார் கருப்பு கொடியுடன் ஓடிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் நாளை கூடுதல் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும் மெரினா கடற்கரையை நாளை காலை முதலே சீல் வைத்து தேவையில்லாதவர்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மெரினா கடற்கரை திறந்தவெளி பகுதி என்பதால் நாளை மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal