தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் வஃக்பு வாரியம் மீது வரலாறு காணாத வழக்குகள் பதிவாகியிருப்பதால், தலைவரை நீக்க வேண்டும் எனவும் இல்லையெல்லாம் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிடுவோம் எனவும் தமிழ்நாடு தர்காக்கள் ஜாமாத் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு தர்க்காக்கள் ஜமாத் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ரூ.2000 கோடி வஃக்பு வாரிய சொத்துக்கள் வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த உத்தரவிட்டும், பழைய சி.இ.ஓ.வை மாற்றி விட்டு தனக்கு வேண்டிய சி.இ.ஓ.வை நியமித்திருக்கிறார் தலைவர்!
தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் வழங்கிய பல உத்தரவுகளை உயர்நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. உதாரணமாக, மதுரை காஜிமார் தெரு பள்ளி ஸ்கீமில் உயர்நீதிமன்றம் வஃக்பு வாரிய தலைவரை, வஃக்பு வாரியம் வஃக்பு வாரியமாக செயல்பட வேண்டும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என எச்சரித்திருந்தது.
உம்ரான் சொல்கிறேன் என்று அனுமதி பெற்று துபாய் சென்று பல கூட்டங்கள் நடத்தி தான் கட்டும் மருத்துவக் கல்லூரிக்கு தன்னுடைய சாலிஹீன் அறக்கட்டளைக்கு அதிக பணம் தருபவர்களுக்கு பல கோடி மதிப்பிலான வஃக்பு நிர்வாகங்களை கைமாற்றியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய வஃக்பான அதிராம்பட்டிணம் எம்.கே.என். அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நிமியக்க தூத்துக்குடி தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் வஃக்பு வாரிய தலைவர்!
இந்து அறநிலையத்துறை முலமாக கோடிக்கான சொத்துக்களை மீட்டுக்கொடுத்துள்ளார் முதல்வர். ஆனால், வஃக்பு வாரிய சொத்துக்கள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. எனவே, திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர், எங்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும். அதோடு, அடுக்கடுக்கான குற்றச் சாட்டுக்களை சுமந்து வரும் வஃக்பு வாரியத் தலைவரையும் மாற்ற வேண்டும்!’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே சமயம், இந்தக் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை என்றால், தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்றும் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்!
இதற்கிடையே, தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் வக்பு சொத்துகளை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் பதவி விலகக் கோரியும் சட்டமன்ற முற்றுகை போராட்ட அறிவிப்பு குறித்து சென்னை மண்ணடியில் உள்ள மஸ்தான் தர்காவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் நிர்வாகி சையத் தில்லர். அப்போது, வஃக்பு வாரியத் தலைவரின் ஆட்கள் தகராறு செய்ததால் பரபரப்பு நிலவியது. பிறகு போலீசார் வந்து சமரசம் செய்தனர்!