தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர ரூ.10 கட்டணமாக செலுத்தவேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:

‘‘- ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை, “முத்தமிழஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு” உறுப்பினர்களை சேர்த்தல் பணிகளை உடன்பிறப்பு களாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்புடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். எனவே தி.மு.க.தொண்டர்கள் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.
  2. உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25.
  3. உறுப்பினருக்கான கட்டண தொகையை மணி யார்டர், டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) மூலம் அனுப்புகின்றவர்கள் அந்த கட்டணத் தொகை விவரத்தையும் மணியார்டர் ரசீது அல்லது டி.டி. எண்ணையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டத்திற்குள் குறித்து அனுப்ப வேண்டும்.
  4. விதி 5, பிரிவு 5-ன்படி உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.
  5. உறுப்பினராக சேர விரும்புவோர், உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண்., புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை மட்டும் நகல் (ஜெராக்ஸ்) எடுத்து இணைத்திட வேண்டும்.
  6. விதி 5, பிரிவு 3-ன்படி உறுப்பினர் பதிவுத்தாளில் சம்பந்தப்பட்ட வார்டு கிளையின் நிர்வாகிகள், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மேலமைப்பு நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட கழக, மாநகர் மாவட்ட கழக, மாநகர கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், அந்தந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் கையொப்பமிட்டு உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களில் பரிந்துரை செய்யும் தகுதி பெற்றவராவர்.
  7. உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்தவுடன் காலம் தாழ்த்தாமல், மொத்தமாக சேர்த்து வைக்காமல், உடனுக்குடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
  8. உறுப்பினர் விண்ணப் படிவங்களையும், அதற்குரிய கட்டணத் தொகையினையும் “பொதுச்செயலாளர், தி.மு.க. தலைமை நிலையம், அண்ணா அறிவாலயம், 367 & 369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018” என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  9. உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டணத் தொகை தலைமைக்கழகத்திற்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்’’ இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal