தவெக ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏக்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் திமுக, அதிமுக இணைந்து தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக மதுரை எம்எல்ஏ முஸ்தபா புகார் கூறினார். செல்போன் ஆடியோ அடிப்படையில் அதிமுக நிர்வாகி மன்னன் என்பவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘தவெக ஆட்சியை கவிழ்க்க மீண்டும் முயற்சி நடக்கிறது. தவெகவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்து, தவெகவுக்கு எதிராக வாக்களிக்க என்னிடம் பேரம் பேசினார்கள். ரூ.15 கோடியில் தொடங்கி ரூ.30 கோடி வரை பேரம் பேசினார்கள். திமுக, அதிமுக இணைந்து தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள். என்னிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் பேரம் பேசினார்.

முன்பணமாக ரூ.15 கோடியும், வாக்கெடுப்புக்கு பிறகு ரூ.15 கோடியும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். தவெகவின் நல்லாட்சியை தடுக்க நினைக்கிறார்கள். இதற்காக திமுகவும், அதிமுகவும் இணைந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவெக மேலிடத்தில் சொல்லியுள்ளேன். ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெகவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க மாட்டோம். இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நாளில் அது யார் என சொல்வேன்’’ என கூறினார்.
இதுகுறித்து காவல்துறையிடமும் அவர் புகார் அளித்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவினர் திமுக, அதிமுக மீது சரமாரியான விமர்சனங்களை வைத்தனர். தவெகவினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக பொய் சொல்கிறார்கள் என திமுக, அதிமுக நிர்வாகிகள் கூறினர். இந்நிலையில் முஸ்தபா வைத்த குற்றச்சாட்டு குறித்து மதுரை அதிமுக நிர்வாகி மன்னன் என்பவரிடம் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மன்னன் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயராக இருந்தவர். பேரம் பேசியதற்காக தன்னிடம் செல்போன் உரையாடல் ஆடியோ உள்ளது என்று முஸ்தபா கூறியிருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மன்னனை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தலைவிரித்தாலும் விலைவாசி உயர்வு பிரச்னையை திசை திருப்புவதற்காக த.வெ.க. போடும் நாடகம்தான் ‘பேரம்’ என்கிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்!
