குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இப்போது பல்வேறு வகையான கண்டிஷன்களை போடுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்!

நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போதே சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்த்தப்பட்டதுதான் மக்களுக்கு கொடுத்த பரிசு என்று குற்றம் சாட்டினார். கல்வியில் பின்னடைவு ஏற்பட்டதை கண்டித்தும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டார்.

திமுகவின் 23 மாத கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 91000 கோடி கடன் வாங்குவதாக கூறியுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கினாலும் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

வரி வருவாய் உயர்ந்தும் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா பரவியது. 15 மாதங்கள் தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. வரி வருமானம் நின்று போனது. வருமானம் குறைந்து செலவு அதிகரித்தது. திமுக ஆட்சி காலத்தில் கொரோனா குறைந்து வரி வருமானம் அதிகரித்தது. பிறகு ஏன் பற்றாக்குறை நிலவுகிறது என்று கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. கடன் சுமை அதிகரித்து விட்டது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தகுதிவாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டுமே ரூ.1000 தரப்படும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின், ‘நீங்க எல்லோரும் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகைகளை அடகு வையுங்கள்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், அந்தக் கடன் தள்ளுபடி ஆகும்’ என்றார். இதை நம்பி ஏராளமானோர் அடகு வைத்து, ‘கண்டிஷன்கள்’ போட்டதால், ஏமாந்து போனதுதான் மிச்சம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal