‘உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் ஈபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’ என்றும் பாயிண்ட்டை பிடித்து வாதங்களை முன்வைத்துள்ளது எடப்பாடி பழனிசாமி அணி அணி.

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் ஓபிஎஸ். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சட்டவிரோதம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளபோது அவசர அவசரமாக, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்ப்பு சார்பாக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. புதிய விதிகளின் படி 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக இருப்பவர் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றால் கட்சியின் அடிப்படை தொண்டர் போட்டியிட முடியாது. இது எம்.ஜி.ஆர் வகுத்த விதிக்கு எதிராக உள்ளது என்றும் வாதிடப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், இல்லையென்றால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என ஓபிஎஸ் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்து பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. அப்போது ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்களின் மூலமே நடத்தப்படுகிறது. 1.50 கோடி உறுப்பினர்களில் ஓபிஎஸ்க்கு 1% கூட ஆதரவு இல்லை. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் 2600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 2100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சியில் பொதுக்குழுதான் அதிகாரம் பெற்ற அமைப்பு.

கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறும் அவர்கள், இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறார்கள்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத்தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்னைகளை கையாள முடியும் என பரபரப்பாக வாதங்களை எடுத்து வைத்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal